Home கட்டுரைகள் தமிழர் வாழ்புலங்களில் தமிழ்மொழிக் கல்வி கற்றல் கற்பித்தல் – சிக்கல்களும் தீர்வுகளும்

தமிழர் வாழ்புலங்களில் தமிழ்மொழிக் கல்வி கற்றல் கற்பித்தல் – சிக்கல்களும் தீர்வுகளும்

0

ஒவ்வொரு இனத்தினதும் இன்றியமையாத அடையாளம் மொழி ஆகும். ஒரு இனத்தைச் செய்வது மொழி. ஒரு இனத்தின் இதயமாகத் திகழ்வது அதன் தாய்மொழி. ஒரு இனத்திடமிருந்து அதன் தாய்மொழியைப் பிரித்து விட்டால், மொழியும் நிலைக்காது. இனமும் சிதைந்து விடும். ஒரு இனத்தை அழிக்க முயல்வோர், முதலில் அவ்வினத்தின் மொழியையே அழிக்க முயல்வர்.

தாயகம் தவிர்ந்த ஏனைய புலங்களில் வாழும் ஒரு இனத்தினிடையே தாய்மொழிக் கல்வி மிக அவசியமானதாகும். புதிய புலங்களில் கால் நூற்றாண்டு வாழ்வியல் வரலாற்றைக் கொண்டிருக்கும் எம் இனம் தாய்மொழிக் கல்வியில் மேம்பட்டு வரும் அதேவேளை, பல பாரிய எதிர்நிலைகளையும் தொடர்ச்சியாகச் சந்தித்து வருகின்றது. எமது தாய்மொழிக்கல்வி எதிர்கொள்ளும் சிக்கல்களைக் கண்டறிந்து, அவற்றிற்கான தீர்வுகளைத் தேடும் ஆய்வாக இக் கட்டுரை அமைகின்றது.

தாய்மொழிக்கல்வியின் தேவையை உணர்தல்.

இனவழி வரலாற்று மொழி

தாய்மொழி எனும் தொடர்,பல்வகை விளக்கங்களைக் கொண்டதாகக் காணப்படுகின்றது.  எனினும்,’ஒரு இனமானது, தமக்கென உரித்தான ஒரு நிலத்தில், போற்றுதற்குரிய பண்பாட்டு விழுமியங்களைக் கொண்டு, தாம் உருவாக்கிக்கொண்ட ஒருமொழியை தலைமுறை தலைமுறையாகப் பயன்படுத்தி வருமாயின், அந்த மொழி அவ்வினத்தின் தாய்மொழி என அழைக்கப்படும.;” என்ற விளக்கமே பொருத்தமாக அமைகின்றது. தமிழ், எம் இனத்தினது வரலாற்று வழி வந்தஉயர்மொழி எனும் உணர்வைக் காலந்தோறும் தோன்றும், தலைமுறைகளுக்கு உணர்த்துதல் வேண்டும்.

இன அடையாளம்

பல்லினச் சூழலில்;, இனத்தினது முதன்மை அடையாளம் அதன் தாய்மொழியாகும். மொழியைக் கொண்டு இனத்தை அடையாளப்படுத்தும் வழக்கமே பெரிதும் நிலவுகின்றது. வாழும் நாடுகளில் இனத்தின் பெயரால் அழைக்கப்படும் நாம், மொழியாலேயே ஏனையோருக்கு அறிமுகமாகின்றோம். மொழியே எம் முகவரி ஆகின்றது. எம் ஆட்சிக்குரிய ஒரு நாடு, எமக்கில்லாதிருக்கும் ஒரு பொழுதில், எம் முழுமை அடையாளம் மொழியே ஆகும். இவ்வுணர்வினைத் தாய்மொழிக் கல்வியூடாக, இளந்தலைமுறையினருக்கு ஊட்டுதல் மிக அவசியம் ஆகும்.

தொடர்பாடல் மொழி

வாழ்புலங்களில், தாய்மொழி வாயிலான தொடர்பாடல் குறைந்து செல்கின்றது என்பது கண்கூடு. எனினும் தாய்மொழி வாயிலான தொடர்பாடலின் அவசியத்தை நாம் உணர்ந்து கொள்ளுதல் வேண்டு;ம். நாம் வாழும் நாடுகளில் முதன்மை மொழிகளாக வௌ;வேறு மொழிகள் உள்ளன.  அந்தந்த மொழிகளில் தேர்ச்சி பெறும் எம் அடுத்த தலைமுறை, தாய்மொழியில் தொடர்பாடும் ஆற்றல் அற்றிருக்குமாயின், ஏனைய நாடுகளில் வாழும் தமிழரோடு எப்படி உறவாட முடியும்?. எல்லா நாடுகளில் வாழும் தமிழர் தம்மிடையே தொடர்பைப் பேணுகின்ற பொதுமொழி தாய்மொழியாகும். தாய்மொழியில் தொடர்பாடல் ஆற்றலை இழந்துவிடுவோர், காலவோட்டத்தில், ஏனைய நாட்டுத் தமிழரது தொடர்புகளை இழந்து, அந்தந்த நாட்டுக்குரிய குடிமக்களாகிவிடுவர்.

வாழ்வியல் மொழி

தாய்மொழியானது, பல்வகையிலும் மக்களால் பயன்படுத்தப்படும் நிலையில் வாழ்வியல் மொழி எனப்படுகின்றது. மக்கள், தேவைகளுக்கு ஏற்;ப, மொழியையும், மொழிவழி கற்றறிந்த விடயங்களையும்  பயன்படுத்துதல் இதன் வழிப்படும். மக்கள் தம்மிடையேயான தொடர்புகளை தாய்மொழியில் தடையின்றி மேற்கொள்வதுவும், உணர்வுகளைப் புரிந்து கொள்ளவும், வெளிப்படுத்தவும் தாய்மொழியை முறையாகப் பயன்படுத்துவதுவும், பல்வகை வடிவங்களிலான சிறந்த படைப்புகளை உருவாக்குவதுவும் வாழ்வியல் மொழியின் சிறப்பு நிலைகளாகும்.

பண்பாட்டு மொழி

பண்பாட்டு மொழி எனும் சிறப்பு, எல்லா மொழிகளுக்கும் கிடைத்துவிடுவதில்லை. மிக நீண்ட வரலாற்றைக் கொண்ட ஒரு இனம், தொடர்ச்சியாகப் பயன்படுத்தி வரும் ஒரு மொழியே பண்பாட்டு மொழி எனும் சிறப்பைப் பெறும். தொடர்பாடல் எனும் எல்லை கடந்து, மரபுகள், விழுமியங்கள், பண்பாடு, கலை, வரலாறு, நம்பிக்கைகள் வழிபாடுகள் என்பன போன்ற, இனத்தின் சீர்மைகளைத் தன்னகத்தே தாங்கி நிற்கும் ஒப்பற்ற மொழி தமிழாகும். எம் மூதாதையர் காலங்காலமாக, உருவாக்கிச் சேகரித்து வைத்திருக்கும் செல்வக் களஞ்சியத்தின் வாயில் தமிழ்மொழியே. மொழியை விட்டு விலகிச் செல்வோர், எம் அரிய செல்வக் களஞ்சியத்தையும் துறந்தே செல்கின்றனர். எமது வாழ்வியல் எங்கும் நிறைந்து கிடக்கும் உயரிய செல்வங்களை, நமதுடைமையாகக் கொண்டு வாழ வேண்டுமெனில், மொழிக்கல்வி மிக அவசியமானதாகும்.

இவை போன்ற பல கரணியங்கள் உலகெங்கும் தாய்மொழிக் கல்வியை முதன்மைப்படுத்துகின்றன. மொழி சார்ந்த கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர், இவற்றைப் புரிந்து கொள்ளுதல் மிக அவசியமாகும்.

புதிய புலத்தில் கற்பித்தல் முறைமைகளைக் கண்டறிதல்.

தாயக வாழ்வியற் சூழலில் இருந்து பெரிதும் மாறுபட்ட புலத்திற் குடியேறி, அப் புலத்திற்கான வாழ்வியல் வரலாற்றைத் தொடங்கும் ஒரு இனமானது,தம் இன இயல்பில், விட்டுக்கொடுப்புகளுக்கு இசைவுறுவதோடு, பல ஏற்புகளுக்கும் தன்னை அணியப்படுத்திக்கொள்கின்றது. கடினத்தன்மை கொண்ட இச் செயல் நிகழாவிடின்;, புதிய புலத்திலான இன இருப்பு நிரந்தரமற்று அழிவுறும். இதற்கேற்ப, கற்பித்தல் முறைமைகளிலும், சூழலுக்கு ஏற்ப, மாற்றங்களைக் கொண்டுவர வேண்டியது மிக அவசியமாகும்.

கற்பித்தலின் தொடக்கநிலையில், கீழ்வரும் விடயங்களை உணர்ந்திருத்தல் மிக அவசியமாகும்.

  1. தாயகம் சார்ந்த கற்பித்தல் முறைமையின் பொருத்தமின்மையை உணர்தல்.
  2. கற்பித்தற் சூழலை நன்கு புரிந்துகொள்ளுதல். சூழலுக்கு ஏற்ப, கற்பித்தலில் மாற்றங்கள் தேவை, என்பதை உணர்தல்.
  3. மாற்றங்கள் தேவை என்பதை உணர்த்தும் முதன்மைக் கரணியங்கள்.
  4. தாய்மொழியை இரண்டாம் மொழியாகக் கற்கும் சூழல்.
  5. மொழியைத் தொடர்பாடல் மொழியாகவும், பண்பாட்டு மொழியாகவும் கற்பிக்க வேண்டிய அவசியம்.
  6. தன்னடையாளம் தாய்மொழியே என்பதை உணர்ந்து செயற்படத் தூண்டுவதன் அவசியம்.
  7. மரபுசார் வாழ்வியலோடு, கலை, இலக்கிய, வரலாற்றையும் கற்பிக்க வேண்டியதன் அவசியம்.
  8. வாழ்புலக் கல்விச் சூழலோடு, ஒத்தியைவு கொண்டதான கற்பித்தல்.
  9. பல்லினச் சூழலில் கைக்கொள்ளப்படும் புதிய மொழிக்கல்வி உத்திகளை ஏற்றல்.

கற்பித்தலில் மாற்றங்கள் தேவை என்பதை அறிந்து கொள்வதற்கான கரணியங்கள் பல இருந்தாலும் இவையே முதன்மைக் கரணியங்களாகின்றன.

–    பொன்னையா விவேகானந்தன்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version