தாய்மொழிக்கல்வியின் தேவையை நன்கறிந்த பின்னர், கற்பித்தற்; சூழலைப் புரிந்துகொண்டு, மாற்றங்களை உள்வாங்கி
கற்பித்தல்; செயற்பாட்டினைத் தொடங்கும்போது, பல புதிய சிக்கல்கள் தோற்றம் கொள்கின்றன. இச் சிக்கல்கள் பலவகைப்பட்டனவாக அமைகின்றன. அனைத்து நிலைகளுக்குமான கற்பித்தலானது, பொதுவான சில சிக்கல்களை எதிர்கொள்கின்றது. இவற்றைவிடவும், வகுப்பறை சார்ந்தும், வயதுநிலை சார்ந்தும் பல்வகைச் சிக்கல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றைப் பின்னர் பார்க்கலாம்
பொதுச்சிக்கல்கள்
தாய்மொழிக் கல்வியினை அனைத்துநிலைகளிலும் உள்ள மாணவர்களுக்கு கற்பிக்க முனையும் போது, எதிர்கொள்ளும் சிக்கல்களைப் பொதுச்சிக்கல்கள் எனலாம்.
- அடையாளம் காணப்பட்ட பொதுச்சிக்கல்கள் சில.
- தாய்மொழிக் கற்றலில் ஆர்வத்தை ஏற்படுத்துதல்
- மாணவர்களின் உளவியலை மதிப்பிடுதல்.
- மாணவர்களின் மொழித் தரத்தை மதிப்பிடுதல்
- கற்பித்தலின் படிநிலைகளைக் கண்டறிதல்.
- கற்பித்தலுக்கான ஒழுங்கமைக்கப்பட்ட கற்கைநெறி.
- தாயகக் கற்பித்தல் உத்திகள் பயன்படாமை.
- புதிய கற்பித்தல் உத்திகளுக்கான தேடல்.
- வகுப்பறையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல்.
- கற்பித்தலுக்கான போதிய மூலவளங்களைப் பெறுதல்.
- மாணவர் வரவைப் பேணுதல்
- பெற்றோருடனான தொடர்புகள்.
அடையாளம் காணப்பட்ட இச் சிக்கல்கள் முறையான தீர்வைப் பெற்றிருத்தல் அவசியமாகும்.
பொதுச் சிக்கல்களுக்கான தீர்வுகள்.
தாய்மொழிக்கல்வியில் மாணவருக்கு ஆர்வத்தை ஏற்படுத்துதல்.
கற்பித்தலின் தொடக்கநிலையில், மாணவர் பெரிதும் பெற்றோரது விருப்பத்திற்கமையவே தாய்மொழியைக் கற்க வருவர். மொழிக்கல்வியில் தாமாக ஈடுபாட்டைக் கொண்டிருப்பது குறைவாகவே காணப்படும். கற்பித்தலில் உள்ள கவர்ச்சி, ஆசிரியரின் அணுகுமுறை, கற்றலின் பயனாக மாணவர் பெறும் பாராட்டு என்பன, மொழிப்பாடத்தில் ஈர்ப்பை ஏற்படுத்தும். ஏறக்குறைய நான்காம் வகுப்புவரை, ஏனைய பாடங்களைப் போன்ற விருப்பத்தையே தாய்மொழிக்கல்வியிலும் கொண்டிருப்பர். ஐந்தாம் தரத்திற்கு மேற்பட்டோர், பெற்றோரது விருப்புகளைக் கடந்து தம் விருப்புகளுக்கே முதன்மை கொடுக்க முயல்வர். இந்நிலையில் தாய்மொழி மீது, உள்ளார்ந்த பற்று இருப்பின் மட்டுமே விருப்போடு கல்வியைத் தொடர்வர். அந்த விருப்பினை ஏற்படுத்துவது ஆசிரியரின் பணியாகும்.
மாணவரின் உளவியலை மதிப்பிடுதல்
கற்பித்தல் சூழலில் மாணவரின் உளவியல் பெரும் பங்கு வகிக்கின்றது. ‘ஒரு ஆசிரியர் முதலின் ஒரு உளவியல் அறிஞனாக இருக்க வேண்டும்” என்பது ஒரு கல்வியியற் பொன்மொழி. மாணவரின் உளவியலைச் சரிவர மதிப்பிடத்தெரியாத ஒருவரால், வெற்றிகரமாகக் கற்பிக்க முடியாது. வகுப்பறைக்கென ஒருவகை உளவியலும், மாணவருக்கென தனித்தனியான உளவியலும் உண்டு. ஒரு பொது நிகழ்வு அல்லது பொதுச் செய்தி வகுப்பறையின் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும். (எ-டு தாயகத்தில் ஏற்பட்ட அழிவு.) மாணவர் ஒவ்வொருவருக்கும் ஏற்;படும் தனிப்பட்ட தாக்கங்கள் அவரவர் உளவியலைப் பாதிக்கும். இவற்றைக் கண்டறிந்து, அவற்றிற்கேற்ப கற்பித்தலை மேற்கொள்வது மிக அவசியமாகும்.
மாணவரின் மொழித்தரத்தை மதிப்பிடல்.
கற்பித்தலை ஆரம்பிப்பதற்கு முன்னதாக, மாணவரின் மொழியறிவுத்; தரத்தை மதிப்பிடுதல் மிக அவசியமாகும். ஒவ்வொருவருடைய மொழியறிவும் தனித்தனியாக பல்வேறு அளவுகளில் மதிப்பிடப்பட்டு, அதற்கேற்ப கற்பித்தல் ஆரம்பிக்கப்பட வேண்டும். நால்வகை மொழித்திறன்கள், இனப்பற்று, மொழிப்பற்று என்பன, மதிப்பிடுதலுக்குரிய பரப்புகளாகும்.
கற்பித்தலின் படிநிலைகளைக் கண்டறிதல்.
மாணவரின் மொழியறிவுத் தரத்தைக் கண்டறிந்தபின், கற்பித்தல் ஆரம்பமாகும். கற்பித்தலை, எங்கு தொடங்கி, எவ்வாறு வளர்த்துச் செல்வது என்பதில், தெளிவான வரையறை இருத்தல் அவசியம். தொடர்பாடல் மொழி, பண்பாட்டு மொழி, வாழ்வியல் மொழி எனும் நிலைகளில் கற்பித்தல் வளர்ச்சிப் படிநிலைகளை,கற்பித்தலுக்கு முன்பாக உருவாக்குதல் அவசியமாகும்.
கற்பித்தலுக்கான ஒழுங்கமைக்கப்பட்ட கற்கைநெறி.
மொழிக்கல்விக்குரிய ஒழுங்கமைக்கப்பட்ட கற்கைநெறி, கற்பித்தலுக்கு முன்பாக, அணியம் செய்யப்பட வேண்டியது மிக அவசியமாகும். கற்பித்தலுக்குரிய படிநிலைகளைகளைக் கண்டறிந்தாலும், அவற்றைத் தொடர்ச்சியாக ஆண்டு முழுமையும் கற்பிப்பதற்குரிய பாடத்திட்டமும், கற்றல் நாட்களுக்குரிய அலகுகளும் (Day Plan) நேர்த்தியான முறையில் உருவாக்கப்பட்டிருத்தல் வேண்டும். உருவாக்கப்படும் கற்கைநெறி, தரங்களுக்கிடையேயான தொடர்ச்சியினையும், முறையான வளர்ச்சிப்படிகளையும் கொண்டிருத்தல் வேண்டும்.
தாயகக் கற்பித்தல் உத்திகள் பயன்படாமை.
வாழ்புலச் சூழலில், முற்றிலும் தேர்ந்த தமிழ் ஆசிரியர்களைக் கண்டறிதல் அரிது. ஆர்வமுள்ள பலரும் கற்பித்தலில் ஈடுபடுகின்றனர். வாழ்புலத்தினது, கற்பித்தல் சூழலுக்குப் பெரிதும் பழக்கப்பட்டிருக்காத இவர்கள், தாயகக் கற்பித்தல் முறைமைகளையே கையாள முனைவர். வாழ்புலச் சூழலை மையப்படுத்திப் பயிலும் மாணவர், இம் முறைமைகளோடு முரண்படுவர். இந்நிலையில் சூழலைப் புரிந்து கொண்டு, புதிய கற்பித்தல் முறைமைகளைக் கையாளுதல் மிக அவசியமானதாகும்.
புதிய கற்பித்தல் உத்திகளுக்கான தேடல்.
பல்லினச் சூழலில், மொழிக்கல்வியைப் பயிற்றுவிப்பதற்குரிய பல்வகை உத்திகளைக் கையாள வேண்டியது முதன்மையான கற்பித்தல் செயற்பாடாகும். வாழ்புலச் சூழலில் தாய்மொழிக் கல்வியைப் பல இனத்தவர் கைக்கொண்டு வருகின்றனர். அவர்கள் கையாளும் கற்பித்தல் உத்திகள் பல, அனைவருக்கும் பயன்தரத்தக்கவை. அவற்றைத் தேடிப்பெற்றுக் கொள்வது சிறப்பானது. ஆசிரியரது கூட்டுப் பயிற்சியரங்குகள் வாயிலாகக் கற்பித்தல் உத்திகளைப் பரிமாறிக்கொள்ள முடியும்.
வகுப்பறையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல்.
கற்பித்தலின் போது, மாணவர் முழுமையாகக் கற்றல் சூழலுக்குள் உள்வாங்கப்பட வேண்டும். அவ்வாறு உள்வாங்கப்படாதவர்கள், கற்றல் செயற்பாட்டுக்கு இடையூறாக இருப்பர். தமக்குள் பேசுதல், எழுந்து திரிதல், கற்போருக்கு இடையூறு செய்தல் என்பன, பொதுவாக நிகழ்கின்ற, கட்டுப்பாட்டை மீறிய செயல்களாகும். இவற்றைத் தீர்க்கும் வழிகளை அறிந்திருத்தல் அவசியமாகும். மற்றுமொரு பகுதியில், வகுப்பறை முகாமைத்துவம் குறித்து விரிவாகச் சொல்லப்படுகின்றது.
கற்பித்தலுக்கான மூலவளங்களைப் பெறுதல்
கற்பித்தலுக்கான பாடநூல்கள், பயிற்சிநூல்கள் என்பன, கற்பித்தலை முழுமையாக்கக் கூடியவை அல்ல. கற்பித்தலை முழுமையாக்க பல்வகை வளங்கள் தேவைப்படுகின்றன. ஒளிப்படங்கள், ஒலி, ஒளி கருவிகள், கணிணி போன்றவை அவசியமாகின்றன. அத்துடன், ஆசிரியர் தம் கற்பித்தல் ஆற்றலைப் பெருக்கும் வகையில் பல்வகை நூல்களை வாசித்தறிதல் வேண்டும். அத்தகைய நூல்களைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் உருவாக்கப்படல் வேண்டும்.
மாணவர் வரவைப் பேணுதல்
கற்பித்தலின் தொடக்கத்தில் காணப்பட்ட மாணவர் எண்ணிக்கை, காலவோட்டத்தில் குறைவடைவது கற்பித்தலில் குறிப்பிடத்தக்க குறைபாடாகக் கணிக்கப்படுகின்றது. ஆசிரியரின் கற்பித்தல் ஆளுமையின் குறிகாட்டியாக மாணவர் வரவைக் கருதுவர். கற்றலில் ஈடுபாட்டைக் கொண்டிருக்கும் மாணவர் தம் வரவில் அக்கறை கொண்டிருப்பர். ஏனைய மாணவர்களுக்கு ஈடுபாட்டினை ஏற்படுத்துவது மிக முக்கியமானது. னுகைகநசநவெயைவiபெ ஐளெவசரஉவழைn எனும் கற்பித்தல் முறைமை, அனைத்து மாணவர்களையும் கற்றல் செயற்பாட்டில் ஈடுபடுத்துவதில் பெரு வெற்றி கண்டுள்ளது. இக் கற்பித்தல் முறைமை பற்றிய விரிவாக்கத்தை மற்றுமொரு பகுதியில் பார்க்கலாம்.
பெற்றோருடனான தொடர்புகள்
கற்பித்தலில், பெற்றோருடனான தொடர்பாடல், முதன்மையாக ஒன்றாகக் கருதப்படுகின்றது. கற்பித்தலின் போது ஏற்படுகின்ற பல்வகைச் சிக்கல்களுக்கும் தீர்வைத் தரவல்லதாக பெற்றோர் தொடர்பாடல் அமையும். கற்பித்தல் செயற்பாடுஆசிரியர், மாணவர், பெற்றார் என, முத்தரப்பினரையும் இணைத்தாக அமையவேண்டும். வாழ்புலத்தில் பெற்றோரது விருப்பு வெறுப்புகளே, மாணவரின் தாய்மொழிக் கல்வியைத் தீர்மானிக்கின்றது என்பதை, ஆசிரியர் நன்கு உணர்ந்திருத்தல் அவசியமாகும். மாணவர் பற்றிய குறைகளையும் நிறைகளையும் அவ்வப்போது பெற்றோருடன் பகிர்ந்து கொள்வது கற்பித்தல் குறித்த ஆழமான நம்பிக்கையை அனைவருக்கும் ஏற்படுத்தும்.
கண்டறியப்பட்ட சில பொதுச்சிக்கல்களுக்கான தீர்வுகள் சுருக்கமாகக் மேலே கூறப்பட்டுள்ளன.
– பொன்னையா விவேகானந்தன்.