கற்பித்தலை ஆரம்பித்த பின், வகுப்பறைச் சூழலில் சில சிக்கல்கள் தோன்றும். அவற்றில் சிலவற்றை நோக்குவோம்.
மொழியறிவில் ஏற்றத்தாழ்வுகள்.
ஒரே தரத்தில் பயிலும் மாணவர், பெரும்பாலும் ஒரு வகுப்பில் பயில அனுமதிக்கப்படுவர். ஒத்த வயதினர் ஒரே வகுப்பில் பயிலுதல் வேண்டும் என்பது மேற்குலக நாடுகளின் விதி. மாணவர், ஒத்த வயதுடையவராக இருப்பினும், மொழியறிவில் பாரிய ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டவராக இருப்பர். குறித்த ஒரு நேரப்பொழுதுக்குள், மொழியறிவில் மாறுபட்டிருக்கும் அனைவருக்கும் ஒத்த அளவில் கற்பிப்பதானது, அறைகூவல் நிறைந்த பணியாகும். இச் சிக்கலை வெற்றிகரமாகக் கையாள்வதற்கு பல வழிமுறைகள் உள்ளன.
- ஒரு வகுப்பறையில், மொழியறிவில் ஓரளவு ஒத்த அளவைக் கொண்ட மாணவர்களைக் கொண்டிருக்க முயல்தல்.
- மொழியறிவில் சமமான அளவைக் கொண்டவர்களைக் குழுக்களாக்குதல்.
- ஒவ்வொரு குழுக்களுக்கும் ஏற்ற வகையில் பாடங்களையும் பயிற்சிகளையும் தனித்தனியாக உருவாக்கி வழங்குதல்.
- ஒவ்வொரு குழுக்களுக்கும் தனித்தனியாகக் கற்பிக்கும் வாய்ப்பிருப்பின் பயன்படுத்துதல்.
- மொழியறிவில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் எனும் வேறுபாடு தோன்றாவண்ணம் வகுப்பறையைக் கையாளுதல்.
- எல்லோருக்கும் ஒத்த அளவில் கல்வியை வழங்குதல்
கற்கும் திறனில் ஏற்றத்தாழ்வுகள்
கற்பித்தலின் போது, வழங்கப்படும் பயிற்சிகளைச் செய்து முடிப்பதில் மாணவர் வேறுபட்ட வேகங்களைக் கொண்டிருப்பர். விரைவாகப் பயிற்சிகளைச் செய்து முடித்த மாணவர், ஏனைய மாணவரைக் குழப்பும் வாய்ப்புகள் இருக்கின்றன. அவர்களுக்கான மேலதிக பயிற்சிகள் எப்போதும் அணியமாயிருத்தல் வேண்டும். அதேவேளை, பயிற்சிகளை முடிப்பதில் பின்னிற்கும் மாணவருக்கு, பயிற்சிகளை முடிக்க உதவுதல் வேண்டும்.
கேட்டல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் எனும் கற்றல் திறன்களில், மாணவர் வேறுபட்ட ஆற்றலைக் கொண்டிருப்பர். ஒருவர் நன்றாகப் பேசுவார். ஆனால் எழுத்தறிவில் ஆற்றல் போதியளவு இருக்காது. தன்னால் சிறப்பிக்கக் கூடிய திறனில் அக்கறை கொள்ளும் மாணவர், மற்றறையதிறன்களை வெறுக்க முனைவர். இத்தகைய மாணவர்களை முறையாக மதிப்பிட்டு, ஆற்றல் குறைந்த திறன்களில் ஈடுபாடும்,மேன்மையும் ஏற்பட உதவவேண்டும்.
பாடநூலின் பொருத்தமின்மை
குறித்த தரத்திற்கான பாடநூல், அவ் வகுப்பின் மொழியறிவுக்கு ஏற்புடையது அல்ல என உணரப்படுமிடத்து, கற்பித்தலானது தடைப்படும். பாடநூலைத் தெரிவுசெய்வதற்கு முன்னர், மாணவரின் மொழியறிவு மதிப்பிடப்படல் அவசியம். அத்தகைய மதிப்பீட்டுக்குப் பின்னரே, மாணவருக்கான பாடநூலைத் தெரிவு செய்ய வேண்டும். உருவாக்கப்பட்ட பாடநூல்கள்; எதுவும் மாணவரின் மொழியறிவுக்கு அமைய, கற்பிப்பதற்கு ஏற்றவையல்ல, என்ற நிலை காணப்படுமாயின்,கற்பித்தல் முகாமைத்துவத்துடன் தொடர்பு கொண்டு, மாற்று வழிகளை உருவாக்க வேண்டும். பொருத்தமற்ற நூல்களைக் கற்பித்தல், மாணவர் உளவியலில்; பாதிப்புகளை ஏற்படுத்தும்.
பாடநூல்களில் பயன்படுத்தப்படும் தூய தமிற்சொற்கள்.
தற்போது உருவாக்கப்படும் பாடநூல்களில், பல புதிய தமிற்சொற்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் பல சொற்கள் நடைமுறை மொழிவழக்கில் பயன்படுத்தப்படாதவை. அவை மாணவருக்கு மட்டுமல்ல, ஆசிரியர் பெற்றோர் அனைவருக்கும் புதியதாகவே இருக்கும். பல பிறமொழிச் சொற்கள் தமிழிற் கலந்துள்ளமையை நாம் அறிவோம். அவற்றை நீக்கிவிட்டு, அதே பொருள் தரும், முன்னோர் பயன்படுத்திய சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. எ-டு உருக்கு – மாழை. அதேவேளை, பல புதிய சொற்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. எ-டு சோபா – மெத்திருக்கை. மெத்தையால் செய்யப்பட்ட இருக்கை என்பது இதன் பொருள்.
இச் சொற்களின் பொருள் புரியாத நிலையில், பெற்றோர் குழப்பமடைவது இயல்பு. மொழியைத் தூய்மையுறச் செய்யும் இந்த முயற்;சியின் நோக்கத்தை, ஆசிரியர் ஏனையோருக்கு விளக்குதல் வேண்டும்.
பாடப்பகுதியில் போதிய விளக்கமின்மை
வகுப்புநிலை உயர்ந்து செல்ல, பாடப்பகுதிகள் வரலாறு, இலக்கியம், கலை, பண்பாடு சார்ந்து சற்று விரிவாக வளர்ந்து செல்வதை உணர்ந்திருப்பீர்கள். இவ்வாறான தலைப்புகள் தரநிலைகளுக்கு ஏற்ப, சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன. அவ்வாறான பாடப்பகுதிகளை தேர்வு நோக்கில் மட்டுமே வாசித்து, வினாக்களுக்கு விடை எழுதப் பயிற்றுவிப்பது, முழுமையான கற்பித்தல் ஆகாது. குறிக்கப்பட்ட பாடப்பகுதி பற்றிய தெளிவான பார்வையை ஆசிரியர் கொண்டிருத்தல் மிக அவசியமாகும். பாடப்பகுதி சார்ந்து மாணவர் எழுப்பும் வினாக்களுக்கு, முழுமையான விடை வழங்குவதற்கு, பாட விரிவை அறிந்திருத்தல் முதன்மையானது. பாடப்பகுதிகளோடு தொடர்புபட்ட நூல்களைத் தேடிப் படித்தல், பயிற்சிக் கருத்தரங்குகள் நடத்தல் என்பன விடய விரிவாக்கத்திற்கு உதவும்.
மேலே குறிப்பிடப்பட்டவைகளை விடவும், நீங்கள் அடையாளம் கண்டு கொண்ட சிக்கல்கள் பல இருக்கலாம். கருத்தரங்குகளில் அவற்றை வெளிப்படுத்தி, விடை காண்பது சிறந்தது.
மாணவரின் வயதுநிலைகளுக்கு ஏற்ப, எதிர்கொள்ளும் சிக்கல்கள்.
மாணவரது உடலியல், உளவியல் வளர்ச்சி காலவோட்டத்தில் மாறுபாடடைந்து செல்வது இயல்பு. பெற்றோரும், ஆசிரியரும் இந்த மாறுபாடுகளைப் புரிந்து கொண்டு, மாணவரை அணுகத் தவறுவாறாயின், கற்றல் தொடர்பான உளவியற் சிக்கல்களை மாணவர் ஏற்படுத்துவர். ‘கற்பித்தல் உளவியல்” எனும் துறை, இச் சிக்கல்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டதாகும்.
மாணவரது, உடலியல், உளவியல் மாற்றங்கள் சார்ந்து, அவர்களை நான்கு வகையாகப் பகுக்கலாம்.
- இளநிலை மாணவர் (4 வயது முதல் 6 வயது வரை)
- வளர்நிலை மாணவர் (7 வயது முதல் 12 வயது வரை)
- இடைநிலைமாணவர் (13 வயது முதல் 16 வயது வரை)
- முதுநிலை மாணவர் ( 17 வயதுக்கு மேல்.)
இளநிலை மாணவர்
இவர்கள் குழந்தைப் பருவம் கடந்து, கற்றல்; சூழலுக்குள் அடி எடுத்து வைக்கும் புதியவர்கள். இவர்களை அணுகும் முறை மிக நுட்பமானது. பாராட்டை மட்டுமே விருப்பும் இப் பருவத்தினர், மனம் வாடுவதை ஒருபோதும் விரும்பாதவர். கற்றலின் போது, சிறு தாக்கம் ஏற்பட்டாலும், கற்றலையும், கற்பி;ப்பவரையும் வெறுத்து விடுவர். கூடுதலாக, பயிற்சி பெற்றவர்களும், பெண்களுமே இந்நிலை மாணவருக்குக் கற்பிப்பர்.
வளர்நிலை மாணவர்
பார்த்தும், கேட்டும் உணர்கின்ற விடயங்களை ஆழமாக உள்வாங்கி, வேகமாக வளர்கின்ற பருவம் இதுவாகும். கற்கும் விடயங்களின் அடிப்படை மிக நேர்த்தியாக இப் பருவத்தில் உணர்த்தப்பட வேண்டும். பெற்றாருக்கும், ஆசிரியருக்கும் இயல்பாகவே கீழ்ப்படியும் உளவியல் இப்பருவத்திற்கு உண்டு. இதனை வாய்ப்பாக்கி, மொழிகற்றலின் முதன்மையான தளங்களை இவர்களுக்குள் உருவாக்கிவிட வேண்டும். பண்பாடு, பழக்கவழக்கம், கலையார்வம் போன்றவை இப் பருவத்திலேயே வேர் கொண்டு வளர்பவை. மாணவரின் விருப்பத்திற்குரிய துறைகளை அடையாளம் கண்டு அவற்றைப் பயிற்றுவிக்க ஏதுவான பருவம் இதுவே. தவறுகளைச் செய்வோர், அன்பான அணுகுமுறையினால் வேகமாக மாற்றம் காணுவர். மாணவரின் நினைவாற்றலும் பசுமை கொண்டிருக்கும் பருவமும் இதுவே.
இடைநிலை மாணவர்
பாடசாலைகளில் இடைநிலைத் தரங்களாகக் கருதப்படும் ஆறாம், ஏழாம் எட்டாம் வகுப்பு மாணவர்கள் உள, உடலியல் மாற்றங்களிலும் கற்பித்தலிலும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட வேண்டியவர்களாகக் கருதப்படுகின்றார்கள். இந்நிலை மாணவர்களைக் வெற்றிகரமாகக் கையாளுதல் வினைத்திறன்; நிறைந்த பணியாகும்
இத் தரங்களில் பயிலும் மாணவர்களுக்கான கற்பித்தலை மேற்கொள்ளுவதற்கு முன்பாக, இந்த மாணவர்களின் உள, உடலியல் மாற்றங்களையும், அணுகுமுறைகளையும் ஆசிரியர் புரிந்து கொள்வது மிக அவசியமாகும்.
இந்நிலை வகுப்புகளில் மாணவர்களை அணுகும் முறை, கற்பித்தல் உத்திகளைக் கையாளும் விதம் என்பன, கீழ்நிலை வகுப்புகளில் இருந்தும் மாறுபட்டவை. இந்நிலை மாணவர்களைக் கையாளும் விதம் குறித்து, பல்வகைக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. அவற்றைத் தெரிந்து கொள்ளுதல் மிகவும் பயன்தரும்.
மொழிக்கல்வி
கனடா போன்ற பல்லின பண்பாட்டுச் சூழலில், பொதுமொழி ஒன்றை முதல் மொழியாக்க கொண்டு பயிலும் மாணவர்கள் தம் தாய்மொழியினை இரண்டாம் மொழியாகப் பயில்கின்றனர். வீட்டுமொழியாகத் தாய்மொழி பயன்படுத்தப்படினும், இடைநிலை மாணவர்கள் அதிகரித்துச் செல்லும் தமக்;கிடையேயான தொடர்பாடலைப் பொதுமொழியிலேயே மேற்கொள்ளுகின்றனர். தொடர்பாடல் எனும் பயன்பாட்டில் தாய்மொழியின் தேவை இந்நிலையிலேயே மிகவும் குறுகிப்போகின்றது. தாய்மொழியின் தேவையை விட்டு, மாணவர் விலக முற்படுகின்ற காலமும் இதுவே.
சிறுவயதில் பெற்றாரின் விருப்பத்திற்கேற்ப தாய்மொழியைப் பயின்ற இவர்கள், இடைநிலைத் தரத்தில் தம் விருப்பங்களுக்கே முதன்மை கொடுக்க முயல்வர். பெற்றாரின் விருப்பமும், இவர்களின் முடிவும் முரண்படுகின்ற சூழலின் தோற்றகாலம் இதுவாகும்.
இந்நிலையில் தாய்மொழிக்கல்வியின் அவசியத்தை உணர்ந்தவர்களாக, அல்லது தாய்மொழி மீது ஈடுபாடு; கொண்டவர்களாக, அல்லது பெற்றாரின் தெரிவை மதிப்பவர்களாக இம் மாணவர் இருப்பின், தாய்மொழியைக் கற்க விரும்புவர்.
இளநிலை மொழிக்கல்வியின் பயிற்றுதல் ஊடாக, வளர்ச்சி பெறும் மாணவர் தாய்மொழி மீது ஈர்ப்பு கொண்டவர்களாக உருவாக்கப்பட வேண்டும். ஒருவகையில் மொழியுணர்வு ஊட்டப்பட வேண்டும். தன் தாய்மொழி மதிப்பும், அதன் வளம், தொன்மை தொடர்பான பெருமையுணர்வும் உள்ளத்தில் ஏற்பட வேண்டும்.
இத்தகைய உணர்வுநிலை இளநிலை வகுப்புகளின் ஊடாக தோற்றம் கொண்டு, இடைநிலை வகுப்புகளில் வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தொடர்பாடல் திறன்களை மட்டும் மேம்படுத்தும் கற்பித்தல் முறைமைகள் போதியளவு மொழி ஈடுபாட்டை ஏற்படுத்தவல்லவை அல்ல. இவ்வாறான, மொழி ஈடுபாட்டின் குறைநிலை காரணமாகவே வகுப்பு நிலை அதிகரித்துச் செல்ல, மாணவர் தொகை குறைவடைகின்றது.
இடைநிலை மாணவர்களுக்கான கற்பித்தல் முறைகள்.
இத் தரத்தில் பயிலும் மாணவர்களை நோக்கிய கற்பித்தல் செயற்பாட்டினை ஆரம்பிப்பதற்கு முன்பாக, வகுப்பறையில் மாணவர்களை நன்கு புரிந்து கொள்வதும், அவர்களுடனான தொடர்புகளைக் காத்திரமாக ஏற்படுத்திக் கொள்வதும் அவசியமாகும்.
தாய்மொழி மீது ஈடுபாடு கொள்ளத் தூண்டுதல்.
இடைநிலை மாணவர்கள் வளமான சுயசிந்தனைத்திறன் கொண்டவர்கள் என ஆய்வுகள் கூறுகின்றன. மொழியின் பெருமைகளையும், புகழ் மிக்க வரலாற்றினையும், எளிமையான மொழியியல் கட்டமைப்புகளையும் அவர்களைக் கவரும் வகையில் கற்பித்தல்.
தாய்மொழக் கல்வியின் தேவையை உணர வைத்தல்.
பல்லினப் பண்பாட்டுச் சூழலில், தாய்மொழியே ஒரு இனத்தின் முதன்மை அடையாளம். தொடர்பாடல் எனும் நிலையைக் கடந்து பண்பாட்டு மொழியாக, இனத்தின் செழுமையை, மரபுவழிப்பட்ட இயல்பின் தொடர்ச்சியை, தலைமுறைதோறும் கொண்டு செல்லும் தன்மை கொண்டதாக நிலைத்திருக்க வேண்டியது தாய்மொழி. தாய்மொழியை நாம் இழந்துவிடுவோமாயின் வரக்கூடிய தாக்கங்களை விளங்க வைத்தல் வேண்டும்.
மாணவர் மொழித்திறன்களை மதிப்பிடல்.
மொழித்திறன்களை மேம்படுத்த முன் மாணவர்களின் மொழித்திறன் ஆற்றல்களை மதிப்பிடுதல் மிக அவசியமாகும். மொழி கற்பித்தலில் மொழித்திறன்களின் தொடர் வளர்ச்சியே முதன்மை பெறுகின்றது. குறிக்கப்பட்ட படிநிலைகள் ஒவ்வொன்றிலும் மதிப்பீட்டின் வாயிலாகவே, பயன் மிக்க கற்பித்தலை மேற்கொள்ள முடியும்.
ஒரு வகுப்பில் அளவிடப்படும் மொழித்திறன் பற்றிய மதிப்பீடு ஒருவருக்கொருவர் வேறுபட்டதாகவே இருக்கும். அவரவர் அளவீட்டிற்கு ஏற்ப, பொருத்தமானதாகக் கற்பித்தல் அமைய வேண்டும். அவர்களுக்கு ஏற்ற பாடப்பகுதிகளை சுவையாகக் கற்பிக்கும் அதேவேளை, எளிதான தொடர் பயற்சிகளைம் வழங்க வேண்டும்.
மதிப்பீட்டில் வேறுபட்டிருக்கும் மாணவர் அனைவருக்கும் வேறுபாடற்ற வகையில் கற்பிக்கும் போது, வகுப்பறைச் சமநிலை மாற்றமடையும். சிக்கல்கள் உருவாகும்.
கற்றல் சிக்கல்களை அடையாளம் காணல்
கற்றலை விளங்கிக்கொள்வதில் மாணவரிடையே வேறுபாடு காணப்படும். இடைநிலை பருவ மாணவரிடையே காணப்படும் விளங்கிக்கொள்ளுதல் தொடர்பான சிக்கல்கள், கீழ்நிலை மாணவர்களை விட வேறுபட்டதாகும்.
எ-டு வீட்டில் பெற்றோருடன் ஏற்பட்ட முரண்பாட்டை இந்நிலை மாணவர் வகுப்பில் பிரதிபலிப்பர்.
இவை போன்ற சிக்கல்களை நாம் அடையாளம் கண்டு, சரியான தீர்வினை வழங்குவோமானால், இடைநிலை மாணவருக்கான கற்பித்தல் ஓரளவு எளிதாகி விடும்.
மாணவர் விரும்பும் கற்பித்தலை மேற்கொள்ளுதல்
கற்றறிதல் தொடர்பாகஈ மாணவர் வேறுபட்ட விருப்பங்களைக் கொண்டிருப்பர். (பத்து வகையான புதிய கற்பித்தல் முறைகள் இவற்றையே வெளிப்படுத்துகின்றன.) நாம் பாடத்திட்டத்திற்கேற்ப, குறிக்கப்பட்ட கருப்பொருளையே கற்பிக்க வேண்டியிருப்பதால், மாணவர் விரும்பும் கருப்பொருளைக் கற்பிக் முடியாது. எனினும், மாணவர் விரும்பும் முறையினூடாக, எக்கருப்பொருளையும் கற்பிக்க முடியும். தற்போது பிரபல்யம் பெற்றுவரும் கற்பித்தல் முறைமைகள் (னுகைகநசநவெயைவநன ஐளெவசரஉவழைn) மாணவரின் விருப்பங்களை வகைப்படுத்தியிருக்கின்றது. அவற்றை அறிந்து பயன்படுத்துவதன் மூலம் சிறந்த கற்பித்தலை மேற்கொள்ள முடியும்.
முதுநிலை மாணவர்
தன் விருப்பங்களுக்கேற்ப முடிவெடுத்துச் செயற்படும் தன்மை கொண்ட இம்மாணவர், மொழி கற்றலைத் தொடர்வார்களேயானால், மொழிப் பயன்பாட்டில் உயர்நிலை அடையும் வாய்ப்பினைப் பெறுவர். இவர்களே பிற்காலத்தில் மொழியைக் கற்பிப்பவர்களாகவும், பேணுபவர்களாகவும் உருவாவர். வளரும் மாணவருக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் இவர்களே இனம் சார்ந்த தலைமைத்துவத்திற்கும் தகுதியாவர். இத்தகைய மாணவர்களைக் கையாளும் ஆசிரியர், இனம், மொழி, வரலாறு, பண்பாடு, வாழ்வியல் சார்ந்த ஆழமான அறிவும், தெளிவான பார்வையும் கொண்டிருப்பின் இம் மாணவர் இனம் சார்ந்து பெரும் பணி ஆற்றுவர்.
முடிவுரை
எனது பதினேழு ஆண்டுகால கற்பித்தற் பட்டறிவின் வாயிலாக, உணர்ந்தவற்றையும், கண்டறிந்தவற்றையும் மையப்படுத்தி, வகைப்படுத்தி, கற்பித்தல் கற்றல் தொடர்பான பல விடயங்களைக் குறிப்பிட்டுள்ளேன். இவை என் பட்டறிவின் குறுக்கமே. வாய்ப்பிருப்பின் மற்றுமொரு பொழுதில் இவற்றை விரிவாக ஆராயலாம்.
மேற்குலக நாடுகளில் தமிழர் ஏற்படுத்திக் கொண்ட வாழ்புலங்கள், பெரும் அறைகூவல்கள் நிறைந்தவை. உறுதியும் கடும் உழைப்பும் கொண்ட இனம் நாம் என்பதால், கால்நூற்றாண்டுக்குள் கடுகி நடந்திருக்கின்றோம். வளர்ச்சியின் பல படிகளைக் கடந்திருக்கின்றோம். இப்பயணத்தில், ‘தாய்மொழிக் கல்வி” வாழ்வியல் வளத்தை ஊட்டுவதில் முதன்மை பெறுகின்றது. நாளை தலைநிமிரும் எம் தலைமுறையைச் செப்பனிடுகின்றது. இந்த உயரிய சமுதாயப் பணியை மேற்கொண்டு வரும் அனைத்துத் தமிழ் ஆசிரியர்களும் போற்றுதற்குரியவர்கள்.
– பொன்னையா விவேகானந்தன்